Monday, April 27, 2026

சித்தர்களின் ரகசியமும் -நவீன அறிவியலும்

சித்தர்களின் ரகசியமும் -நவீன அறிவியலும் மரணத்தை வெல்லும் கலை! “உடம்பார் அழியில் உயிரார் அழிவர்” – திருமந்திரம் “உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன் உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான் என்று உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே” – திருமூலர், திருமந்திரம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, எந்த நுண்ணோக்கியும் (Microscope) இல்லாத காலத்தில் திருமூலர் சொன்ன இந்த வரிகள் வெறும் ஆன்மீகப் பாடல்கள் மட்டுமல்ல. இது மனித உடலின் செல்களைப் (Cells) பற்றிய மிகத் துல்லியமான உயிர்வேதியியல் (Biochemical) வரைபடம். “மரணமிலாப் பெருவாழ்வு” என்று சித்தர்கள் சொன்னதை, இன்று நவீன உயிரியல் (Biology) எப்படி நிரூபிக்கிறது? உங்கள் உடலை நீங்களே “மீள்நிலைப்படுத்த” (Reset) செய்யக்கூடிய 6 அறிவியல் ரகசியங்கள் இதோ. ரகசியம் 1: உங்கள் ஆயுளின் ரகசியக் குறியீடு – டெலோமியர் பாதுகாப்பு (Telomere Protection) உங்கள் DNA-வின் முனைகளில், காலணியின் (shoe) லேஸின் நுனியில் இருக்கும் பிளாஸ்டிக் உறை போன்ற ஒரு பகுதி உள்ளது. அதன் பெயர் டெலோமியர் (Telomere). ஒவ்வொரு முறை உங்கள் செல்கள் பிரியும்போதும் இது தேய்ந்து கொண்டே வரும். இது முழுமையாகத் தேய்ந்துவிட்டால், அதுதான் முதுமை; பிறகு மரணம். அறிவியல் விந்தை: தியானம், ஆழ்ந்த மன அமைதி மற்றும் சித்தர்கள் சொன்ன மூச்சுப் பயிற்சி (வாசி யோகம்) ஆகியவற்றைச் செய்யும்போது, டெலோமியர் தேய்வது குறைந்து, ஆயுள் நீடிக்கிறது என்று நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி எலிசபெத் பிளாக்பர்ன் (Elizabeth Blackburn) நிரூபித்துள்ளார். நோபல் விரிவுரை: 2009 ஆம் ஆண்டு உடலியல் மற்றும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு, டெலோமியர்கள் எவ்வாறு செல் முதுமையடைவதைத் தடுக்கின்றன என்பதைக் கண்டுபிடித்ததற்காக எலிசபெத் பிளாக்பர்ன், கரோல் கிரெய்டர், ஜாக் ஸ்ஜோஸ்டாக் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. ரகசியம் 2: உடலின் உள்ளே நடக்கும் “சுய மறுசுழற்சி” – ஆட்டோஃபாகி (Autophagy) நாம் பசித்திருக்கும்போது (நோன்பு / Fasting), நமது செல்கள் என்ன செய்யும்? உணவு கிடைக்காததால், உடலுக்குள் இருக்கும் பழுதடைந்த, தேவையற்ற புரதங்களையும் கழிவுகளையும் (Cellular Garbage) எரித்து ஆற்றலாக மாற்றும். சித்தர் பார்வை: இதைத்தான் சித்தர்கள் “உண்டியே சுருக்கி” வாழும் நோன்பு முறை என்றார்கள். அறிவியல்: ஆட்டோஃபாகி (Autophagy) என்ற இந்தத் தத்துவத்தைக் கண்டுபிடித்ததற்காக 2016 ஆம் ஆண்டு ஜப்பானிய விஞ்ஞானி யோஷினோரி ஓசூமி (Yoshinori Ohsumi) நோபல் பரிசு பெற்றார். ரகசியம் 3: பழையதை அழித்து புதியதைப் படைக்கும் மாயம் – ஸ்டெம் செல் மீளூக்கம் (Stem Cell Rejuvenation) நீங்கள் நீண்ட நேரம் உண்ணாநோன்பு இருக்கும்போது, உங்கள் உடல் ஒரு அதிசயத்தைச் செய்கிறது: பழுதடைந்த பழைய வெள்ளை இரத்த அணுக்களை (White Blood Cells) அழித்துவிட்டு, ஸ்டெம் செல்களைத் தூண்டி புதிய, சக்திவாய்ந்த நோய் எதிர்ப்புச் செல்களை உருவாக்குகிறது. இது உங்கள் உடலின் “Restart Button”-ஐ அழுத்துவதற்குச் சமம். அறிவியல் குறிப்பு: இடைவிடா உண்ணாநோன்பு (Intermittent Fasting) ஸ்டெம் செல்களின் மீளுருவாக்கத் திறனை அதிகரிப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. ரகசியம் 4: மூளைக்கு வயதாவதில்லை! – நியூரோஜெனெசிஸ் & நியூரோபிளாஸ்டிசிட்டி (Neurogenesis & Neuroplasticity) ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பின் மூளை செல்கள் வளராது என்பது பழைய நம்பிக்கை. ஆனால், தொடர்ந்து புதிய விஷயங்களைக் கற்பது, தியானம் மற்றும் நோன்பு ஆகியவற்றின் மூலம் மூளையில் புதிய நரம்புப் பாதைகளை (Neuroplasticity) உருவாக்க முடியும் என்பதை இன்று அறிவியல் ஆணித்தரமாகச் சொல்கிறது. குறிப்பு: குவாண்டம் இயற்பியல் பற்றி எழுதும் எனக்கு (ஆசிரியர்) இரண்டு மாதங்களில் 78 வயது நிறைவடைகிறது. 1968 இல் நான் பொறியியல் படிக்கும்போது, கணினி கண்டுபிடிக்கப்படவில்லை. என் சொந்த முறையான தொடர் அறிதல் (Continuous Learning) மூலமே நான் அறிவியலில் இன்றளவும் புதுப்பித்த நிலையில் இருக்கிறேன். ரகசியம் 5: ஜீன்களைத் திருத்தி எழுதும் வித்தை – எபிஜெனெடிக் ரீசெட் (Epigenetic Reset) “எங்க தாத்தாவுக்கு சர்க்கரை நோய், அதனால எனக்கும் வந்துடுச்சு” என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். மரபணுக்களை (Genes) மாற்ற முடியாது என்பது உண்மைதான். ஆனால், அவை எப்படிச் செயல்பட வேண்டும் (Gene Expression) என்பதை உங்களால் மாற்ற முடியும். அறிவியல் உண்மை: நல்ல உணவு, நோன்பு மற்றும் தியானம் ஆகியவை, ஆயுளைக் குறைக்கும் மரபணுக்களை ‘Switch Off’ செய்துவிட்டு, Sirtuins எனப்படும் புத்துயிர்ப்பு மரபணுக்களை ‘Switch On’ செய்கின்றன. ரகசியம் 6: உடலைத் துருப்பிடிக்காமல் காக்கும் கவசம் – ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்தல் (Reducing Oxidative Stress) இரும்பு காற்றில் பட்டால் துருப்பிடிப்பதைப் போல, நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனால் நமது செல்களும் உள்ளே “துருப்பிடிக்கின்றன” (Oxidative Stress). இதைத் தடுக்க, இயற்கையாகவே நமது உடலில் மெலடோனின் (Melatonin) போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் (Antioxidants) சுரக்கின்றன. இருளில், சரியான நேரத்தில் உறங்கும்போது இது அதிகம் சுரந்து செல்களைக் காக்கிறது. சித்தர்கள் சொன்ன “காயகல்பம்” என்பது வெளியில் கிடைக்கும் ஏதோ ரகசிய மூலிகை மட்டுமல்ல. வெளியிலும் சில காயகல்ப மூலிகைகள் உண்டு என்பதும் உண்மைதான். ஆனால், உண்மையான காயகல்பம் உங்கள் உடலுக்குள்ளேயே – இங்கு சொன்ன Autophagy, Epigenetic Reset, Telomere Protection போன்ற அறிவியல் விந்தைகளே அது. உடலை ஒரு குப்பைத் தொட்டியாகக் கருதாமல், அதை ஒரு தெய்வத்தின் கோயிலாகக் கருதி, சரியான நோன்பு மற்றும் தியானம் மூலம் பராமரித்தால், முதுமையைத் தள்ளிப்போட்டு, ஆரோக்கியமாகப் பல்லாண்டு வாழலாம். இதுவே சித்தர்களின் மெய்ஞானம். 🌷நன்றி குருஜி BG.Venkatesh Badhey Venkatesh

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.