Saturday, March 7, 2026

வள்ளல் பெருமானின் ஆன்ம தேகம் - சான்று

வள்ளல் பெருமானின் ஆன்ம தேகம் - சான்று ஆறாம் திருமுறை அனுபவ மாலை கற்பூரம் மணக்கின்றது என்னுடம்பு முழுதும் கணவர் திருமேனியிலே கலந்த மணம் அதுதான் இற்பூத மணம் போலே மறைவதன்று கண்டாய் இயற்கை மணம் துரிய நிறை இறைவடிவத்துளதே பொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகவர் புண்ணியனார் திருவடிவில் நண்ணியவாறு அதுவே நற்பூதி அணிந்ததிரு வடிவுமுற்றும் தோழி நான் கண்டேன் நான் புணர்ந்தேன் நான் அது ஆனேனே இதை உறுதி செய்வது கீழ் கண்ட கிருபானந்த வாரியார் நூல் குறிப்பு வள்ளலார் உடம்பு பொன்னுடம்பு’ என்பதை வாரியார் சுவாமிகள் தனது சுய சரிதத்தில் எழுதுகிறார். ”வடலூரில் சத்திய ஞானசபை திருப்பணித் துவக்கத்தில் ஒருநாள், சத்திய ஞானசபையின் அர்ச்சகர் பாலசுப்ரமணிய சிவாச்சார்யரின் இல்லத்துக்கு உணவு அருந்தச் சென்றிருந்தேன். பாலசுப்ரமணிய சிவாச்சார்யர் நேர்மையானவர். வள்ளலாரின் சீடரான சபாபதி சிவாச்சார்யரின் பேரன். அவரின் தாயார் நடையில் அமர்ந்திருந்தார். நான் அவரை வணங்கி, அவருக்கு அருகில் அமர்ந்தேன். ‘பெரியம்மா, வணக்கம்! தாங்கள் ராமலிங்க அடிகளாரைப் பார்த்திருக்கிறீர்களா?’ என்று ஆவலுடன் கேட்டேன். அவர் சிரித்த முகத்துடன், ‘அப்போது எனக்கு ஐந்தரை வயது. எங்கள் தாத்தா ஆடூர் சபாபதி சிவாச்சார்யரைக் காண சந்நிதானம் (வள்ளலார்) வருவார். என் தோள்களைப் பிடித்து, ‘குட்டிப் பெண்ணே… குட்டிப்பெண்ணே’ என்று கூப்பிட்டுக் கொஞ்சி விளையாடுவார். அப்போது அவரது திருமேனியில் இருந்து பச்சைக் கற்பூர வாசனை வீசும். அவருடைய சிரத்தில் உள்ள முக்காடு விலகும்போது, மின்னலைப் போன்ற ஞானஒளி வீசும். அப்போது சந்நிதானம், தலையில் உள்ள முக்காட்டுத் துணியை இழுத்து மறைத்துக்கொள்வார்’ என்றார். இதைக் கேட்டு அளவற்ற மகிழ்ச்சியும் அதிசயமும் அடைந்தேன்”. கற்பூர மணம் = ஆன்மாவின் தனிப்பட்ட மணம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.